ரயில் விபத்தில் பலியானோரின் உடல் உடற்கூறாய்வுக்கு பின் அனுப்பப்படும்- மா.சு.
மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உத்திரப்பிரதேசம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 64, திருப்பதி சென்றுவிட்டு ராமேஸ்வரம் செல்ல மதுரைக்கு இன்று அதிகாலை வந்துள்ளனர். தடையை மீறி ரயிலில் கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்து உள்ளேயே சமையல் செய்துள்ளனர். இதுவே விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


64 பேரில் 31 பேருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் ரயில் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6 பேர் ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர் ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறோம், உத்தரப்பிரதேச அரசு கேட்டுக் கொண்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். உடற்கூறாய்வு செய்ய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறையின் அறிக்கை வந்தவுடன் 1 மணி நேரத்தில் உடற்கூறாய்வு தொடங்கும். உடற்கூறாய்வுக்கு பின்னர் ரயில் மற்றும் விமானம் மூலம் உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்.” என்றார்.
