அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம் என நிரூபித்துள்ளோம்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் 1.06 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இத்திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவைத்துள்ளது. எனது அரசியல் பயணத்துக்கான உந்து சக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல் இருப்பதுதான் காஞ்சி மாநகரம். அண்ணா பிறந்தநாள்ன இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தேன். தற்போது தமிழ் சமுதாயத்தை காக்ககூடிய திராவிட சுடரை ஏந்தி காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சி செயல்படுத்தி உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டு பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அது வரை இந்த தமிழ்நாட்டை ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள். உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு. எந்த நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம் என நிரூபித்துள்ளோம்” என்றார்.