தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணி டிராபி வென்று அசத்தியுள்ளது.
இந்திய திவ்யாங் கிரிக்கெட் வாரியம் (டிசிசிபிஐ), தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கம் மற்றும் ஜாயின் ஹேண்ட்ஸ் Social Welfare Trust இணைந்து, தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் 2023ஐ நடத்தியது. சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த ( செப்டம்பர் ) 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தியது. இதில் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. முதல் 2 நாட்களில் நடைபெற்ற 6 லீக் ஆட்டங்களில் தமிழகம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

மத்திய பிரதேசம் – கர்நாடகா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. இப்போட்டியில் தமிழக அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து 24ம் தேதி தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேச அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பேட்டிங்கை தேர்வு செய்து 126/4 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் மத்திய பிரதேச அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் தமிழக அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி முதல் முறையாக தேசிய சக்கர நாற்காலி சாம்பியன்ஷிப் டிராபியை வென்றுள்ளது. மேலும், தமிழக அணியின் ஆல்ரவுண்டர் துரைசாமி 34 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றார்.