நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களினால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னிகரில்லாத் தலைவர் – திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் கிராமப்புற மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கில் 2021-2026 ஆம் ஆண்டு வரை 38 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 4 வேளாண்மை கல்லூரிகளும், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 1 சட்டக் கல்லூரி மற்றும் 41 தொழில்பயிற்சி கல்லூரிகள் என மொத்தம் 85 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், 28,351 மாணாக்கர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.
மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 252 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டதனால், 13,346 மாணாக்கர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர். 2016-2021ஆம் ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5,93,848 என்று இருந்த மாணாக்கர்களின் சேர்க்கை தற்போது 7,52,150 என அதிகரித்துள்ளது. குறிப்பாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணாக்கர் சேர்க்கை 2019-2020ஆம் கல்வியாண்டில் 83,432 ஆக இருந்தது, 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1,03,227 ஆக உயர்ந்துள்ளது.

2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவிப் பேராசிரியர் பணிநியமனத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கிடையே 06.10.2025 அன்று 2,708 உதவிப் பேராசிரியர்கள் பணிநியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து 27.11.2025 அன்று முதன்மைத் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணி நியமனம் செய்யப்படும். மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2022-2023 ஆம் ஆண்டில் 1,033 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, மாணாக்கர்களின் கல்விநலன் பாதிக்கப்படாமலிருக்க, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், 2022-23இல் 1,895 கௌரவ விரிவுரையாளர்களும், 2025-2026 ஆம் கல்வியாண்டில் இதுவரை 1,703 கௌரவ விரிவுரையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது, மேலும் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நிரப்பபட உள்ளனர்.
எனவே, மாணாக்கர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படவும் இல்லை. மாணாக்கர் சேர்க்கையும் எந்தவகையிலும் குறையவில்லை. அன்புமணி அவர்கள், தற்போது சேர்ந்துள்ள கூட்டணியின், தனது டெல்லி எஜமானர்களை திருப்திப்படுத்தவே இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை கழக அரசின் மீது சுமத்துகிறார். தமிழ்நாட்டு கல்வி நலனில், மாணவர் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், தான் சேர்ந்து இருக்கும் கூட்டணியிலுள்ள பா.ஜ.க.விடமிருந்து தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைக் கேட்டு பெறட்டும். பின்பு அவர் கல்வித்துறை மீது கவலை கொள்ளலாம். அதுவரை நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பெரியார் வழிவந்த, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையைப் பின்பற்றி, முத்தமிழறிஞர் அவர்களின் வழித்தோன்றலான நம் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கையை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதால் கல்வித் துறைக்கு வழங்கவேண்டிய நிதியை அன்புமணி உறவு வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி அந்த நிதியை வழங்க பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் தந்தாரா…? அல்லது அழுத்தம் தந்தால் தன்னை கூட்டணியிலிருந்து விலக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் இம்மாதிரியான பொய்யான தகவல்களைத் தருகிறார். ஒருவேளை தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை இவர் ஆதரிக்கிறாரா…?
ஒன்றிய பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி வந்தாலும், நிதி ஓரவஞ்சனை செய்தாலும் பல தடைகளைத் தாண்டி மாணவர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றவுடன் கழகத் தலைவர் முதலமைச்சர் தமது பிறந்தநாளில் (01.03.2022) நான் முதல்வன் என்ற முத்தான திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்; மாணவர்கள் அவரவர் துறையில் முதன்மை வாய்ந்தவர்களாக முதல்வராகத் திகழ வேண்டும் என்பதே..! அதற்காக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவர்களின் தேவை அறிந்து தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 48.65 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான, நான் முதல்வன் – குடிமைப் பணி பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்கும் திட்டத்தினால், சமீப ஆண்டுகளில் மத்திய அரசு நடத்தும் UPSC தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள், அதிக அளவில் வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதே எங்கள் தளபதி அவர்களின் ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் சாட்சியாகும். இதை அன்புமணி மறுக்கிறாரா?
மேலும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவு, பொருளாதாரத்தை ஒரு காரணமாகக் காட்டி நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தைத் தவிர்த்து உயர்கல்வியில் சேர்க்கை பெறும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் உன்னதத் திட்டங்களான “தமிழ்ப்புதல்வன்” “புதுமைப்பெண்” போன்ற திட்டங்களை வழங்கியவர் நமது முதலமைச்சர். இத்திட்டங்களினால் 12 இலட்சம் மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது உலக நாடுகளில். நமது தமிழ்நாட்டு மாணவர்கள் திறம்படப் போட்டியிட்டு உச்சம் தொட “உலகம் உங்கள் கையில்” என்ற உன்னதத் திட்டத்தின் வாயிலாக பத்து லட்சம் மடிக்கணினிகள் இந்தக் கல்வியாண்டிலேயே வழங்கிடவும், அடுத்த கல்வியாண்டில் மேலும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கிடவும் ஆணையிட்டார்கள். அதன்படி தற்போது வரை 8.32 இலட்சத்திற்கும் மேலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், உயர்கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராசர் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி அறிவித்து, தற்போது வரை ரூ.909 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கலைக்கூடங்களின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனமாகவும், QS உலகத் தரவரிசையில் முதல் 150 இடங்களில் ஒன்றாக உயர்த்திடும் நோக்கில் ரூபாய் 1,380 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வகங்கள் அனைத்தையும் ரூ.61.16 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாணாக்கர்களின் உயர்கல்விச் சேர்க்கை மற்றும் சேவை எல்லா வகையிலும் தற்போது மேம்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சிகள் மூலமாக அரசு அவர்களை கூடுதலாக திறன் பெற்ற மாணாக்கர்களாக உருவாக்கி வருகிறது. இது, எங்களது தளபதியின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை என்பதே உண்மை நிலை.
அன்புமணி இனிமேலாவது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாகச் செயல்படாமல் அவர்கள் உண்மை நிலை அறிந்து பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்


