மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. அதன்படி கடந்த, 2020, 2021-ம் ஆண்டுகளில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, தகுதியுள்ளோரை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 77 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டது ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால்வளம் துணை பதிவாளர் தலைமையில் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரையும் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் நடக்க காரணமாக இருந்த தேர்வுக்குழு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆவின் ஆணையர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.
