ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் 54-வது இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச அளவிலான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் படத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும், இது தவிர, நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் விழாவில் திரையிட தேர்வாகியுள்ளன. இது தவிர, பல திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.