திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி நித்யா . முத்துராஜ் திருப்பூரில் உள்ள பணியின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயது சிறுவன் லோகேஷ் என்ற குழந்தை மட்டும் உள்ளது.
இந்நிலையில் இன்று பகல் 12 மணி அளவில் குழந்தை லோகேஷை காணோம் என்று நித்தியா பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். இதனை தொடர்ந்து மாடியில் தேடி பார்த்த போது மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் சிறுவன் லோகேஷ் சடலமாக கிடந்தான். இது குறித்து சிறுவன் தந்தை முத்துராஜ் மற்றும் அவனியாபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு போலீசார் லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்ப வந்த போது உறவினர்கள் மற்றும் குழந்தையின் தாயார் காவல்துறையினரிடம் குழந்தையின் உடலை கொடுக்க மறுத்தனர். மேலும் தாயார் நித்தியா தற்கொலை செய்ய முயன்றார்.
இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர் மற்றும் லோகேஷின் தாயார் நித்தியாவிடம் பேசி சமாதானம் செய்து சிறுவன் லேகேஷ் உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
