சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசிய வானதி சீனிவாசன், ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக கூறி தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து கிளம்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச தொடங்கியபோதே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்த போது கோஷங்களை எழுப்பி பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “ஆளுநரை தங்களின் சித்தாந்தத்தைப் புகழ்பாடும் நபராக இந்த அரசு நினைக்க முடியாது. எவையெல்லாம் அரசின் திட்டங்களோ, செயல்களோ அதைத்தான் ஆளுநர் குறிப்பிடுவார். ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு எதிரானது. ஆளுநர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது. ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பினார்.
