கோலிவுட்டில் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் புபேந்தர் சிங். அஜித் நடித்த வில்லன் படத்திலிம் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கிலும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் அவர் படம் நடிக்காமல் வெள்ளித்திரையிலிருந்து விலகினார். அதையடுத்து, இந்தி டிவி தொடர்களில் அவர் அப்பா, வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
புபேந்தருக்கு உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் பண்ணை தோட்டம் உள்ளது. அதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. புபேந்தர் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி, அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றார். இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த புபேந்தர், தன் உதவியாளர்களுடன் சேர்ந்து குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், புபேந்தர் தனது துப்பாக்கியால் சுட்டதில், குர்தீப்பின் மகன் கோவிந்த் உயிரிழந்தார். அவருக்கு வயது 22. இந்த தாக்குதலில் குர்தீப் மற்றும் அவரது மற்றொரு மகன், மனைவி பீரா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புபேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.