நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. சந்திரமுகி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ராகவா லாரன்ஸ்-க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். அத்துடன் இப்படம் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவும், ராகவா லாரன்ஸும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். இதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் அடுத்ததாக என்ன படம் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது ராகவா லாரன்ஸ் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் மந்திரமூர்த்தி, சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ராகவா லாரன்ஸ் மற்றும் மந்திரமூர்த்தி இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ராகவா லாரன்ஸ்-க்காக, இயக்குனர் மந்திரமூர்த்தி எந்த மாதிரியான கதையை தயார் செய்து வைத்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புதிய படத்தை கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் இயக்குனர் மந்திரமூர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் தனது அடுத்த படத்தையும் இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இயக்குனர் மந்திரமூர்த்தி முதலில் எந்த படத்தை இயக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.