பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000-க்கு விற்பனையாகி வருகிறது.


திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயகன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் பூ விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆனால் இன்று 14.01.23 திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 13 டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் தலைக்கு சூடிக்கொள்ளக்கூடிய பூக்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1300 விற்பனை ஆனது. ஆனால் தற்பொழுது மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ. 4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ. 700க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ ரூ. 2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஜாதிப்பூ தற்பொழுது ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காக்கரட்டான் ரூ .1,800- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்தி தற்பொழுது ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.50-க்கு விற்பனையான செண்டுமல்லி தற்பொழுது ரூ.100-க்கு விற்பனையாகிறது. ரூ.60-க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் தற்பொழுது ரூ. 200-க்கும் விற்பனை ஆகிறது ரூ.70-க்கு விற்பனை சம்பங்கி தற்பொழுது ரூ.250-க்கு விற்பனையாகிறது. பெண்கள் தலைக்கு சூடிக்கொள்ளக்கூடிய பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே பூக்களின் வரத்து அதிகமாக இருக்கும். அப்பொழுதுதான் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மேலும் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
