“துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்” என எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை தெற்கு தொகுதி 80 வது வார்டு சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் துணிவு அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன் என்ற வாசகங்களுடன் எம்ஜிஆர் உடன் கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த ஆனந்த ஜோதி திரைப்பட புகைப்படமும் எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன. தற்போது துணிவு , வாரிசு படம் குறித்தான பேச்சுகள் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மீம்ஸ்களும் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது டிரென்ட்டிங் ஆனதால் தற்போது அரசியல் கட்சியினரும் துணிவு, வாரிசு படங்களின் பெயர்களை வைத்து போஸ்டர்களை ஒட்டி கவனத்தை ஈர்த்து வருகிறது.
