சென்னை மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளுக்கு காட்டும் ஆர்வம் குறைவாக இருப்பது வேதனை அளிக்கிறது.மத்திய அரசு பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 2% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரே அதிகம் சேருவது வருத்தம் அளிக்கிறது.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் கூட நம் மாநிலத்தவரைவிட வெளிமாநிலத்தவரே அதிகம் சேர்கின்றனர். இதனை நாம் சரி செய்ய வேண்டும்.
கல்வியை வழங்கி சமூகத்தில் உயர்நிலையை அடையச் செய்வது தான் திராவிட மாடலின் இலக்கு. தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல தோன்றி லட்சக்கணக்கான பணத்தை வசூலிக்கின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
