சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் 35 வயது நிரம்பிய பெண். இவர் மாவட்ட ஆட்சியரின் மனைவி ஆவார்.

நேற்று பெற்றோரை வழியனுப்புவற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெண் அதிகாரி, பின்பு 6 வது நுழைவாயில் வழியாக சென்ற போது, அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி கூச்சலிட்டதால் உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த ரயில்வே போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பிடித்தனர்.
பின்னர் பிடிப்பட்ட வாலிபரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய போது, யானைக்கவுனி பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும், தனியார் கொரியர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் குடிபோதையில் பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித்குமார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவு படி அஜித்குமாரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.
