தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் இரவில் உறைபனிக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜனவரி 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், காட்டாங் கொளத்தூர், கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது. எதிர்பாராத விதமாக மழை பெய்வதால் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்று மழைவிடும்வரை காத்திருந்தனர்.
