காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொது இடத்தை ஆக்கிரமித்து அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் வீடு கட்ட கடகால் எடுத்துள்ளார்.


இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்களுடன் சேர்ந்து முதியவரான பெருமாள் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு தட்டி கேட்டு உள்ளார். இதனால் மதனுக்கும், பெருமாளுக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மதனுக்கும், முதியவர் பெருமாளுக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், திடீரென மதன் முதியவரை கீழே தள்ளி அருகில் உள்ள கல்லை எடுத்து தலை மீது போட்டுள்ளார். இதனால் முதியவர் பெருமாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட முதியவர் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய மதனையும் தேடிப்பிடித்து கைது செய்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய வரை தட்டிக் கேட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கோளிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
