நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து ஃபேமிலி ஸ்டார் எனும் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
அதேசமயம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா. இவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்படி காதலர் தினத்தன்று இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்பாக விஜய் தேவர் கொண்டா மௌனம் காத்து வந்த நிலையில் இந்த தகவல் உண்மை என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்ட பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ராஷ்மிகாவுக்கும் எனக்கும் திருமணம் குறித்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற திருமண வதந்திகளை ஊடக நண்பர்கள் பரப்பி வருகின்றனர். இது போன்ற வதந்திகளின் மூலம் திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர்” என்று பேசியுள்ளார்.


