அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குளானதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.


அரக்கோணம் அடுத்த நெமிலி கீழ் வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் மயிலேறு திருவிழாவில் கிரேன் மூலமாக மூலவருக்கு மாலை அணிவிப்பது வழக்கம். இந்த திருவிழாவின்போது கிரேன் மூலமாக மாலை அணிவிப்பதற்காக சுமார் 25 அடி உயரத்தில் மாலை அணிவிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் நான்கு நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முத்து (41) மற்றும் பூபாலன் (45) ஆகிய இருவர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரம் தெரிவித்தனர். இதேபோன்று புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஜோதி பாபு (17) என்ற சிறுவனும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த நபர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிரேன் கவிழந்து விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரி லட்சுமணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா வட்டாட்சியர் சுமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
