விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விஷால், தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஆக்சன் நிறைந்த மெடிக்கல் மாஃபியா சம்பந்தமான கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, திருச்சி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் அந்தப் பதிவில் ரத்னம் படமானது மே மாதம் வெளியாகும் எனவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தற்போது பட குழுவினர் சார்பில் நாளை காலை 10.30 மணியளவில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது ரிலீஸ் குறித்த அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியானது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.