திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETO-JAC) சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு (TETO-JAC) சார்பாக மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.