ஐ.ஜிக்கல் செந்தில் வேலன், அஸ்ரா கார்க், அவினாஷ்குமார், துணை ஆணையர் மணிவண்ணன் உள்ளிட்ட 21 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். நாட்டின் 74 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீர தீர செயல் புரிந்த காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது, மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது மற்றும் மெச்சத்தக்க சேவையாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது என மூன்று பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 901 காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவரின் விருது தமிழகத்தை சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன்ராமு மற்றும் அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகிய மூன்று காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஐஜி அஸ்ரா கர்க், சென்னை ஐ ஜி செந்தில் வேலன், திருநெல்வேலி நகர காவல் ஆணையர் அவிநாஷ் குமார், சென்னை பெருநகர வடக்கு மண்டல டிசிபி மணிவண்ணன், சி ஐ டி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எஸ் பி சாமிநாதன், சென்னை மத்திய சரக எஸ் பி முத்துராசு உள்ளிட்ட 21 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
