மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரது நினைவு மண்டபத்தில், மதிமுக தலைமை நிலைய செயலாளரான துரை வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “தாய்க்கு நிகரான தமிழ் மொழிக்கு ஆதரவாக, இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற மொழிப் போரில் உயர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகின்ற நாள் இன்று. மொழிக்காக உயிர் தியாகம் செய்தவர்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திக்கு எதிரான உணர்ச்சி மங்காமால் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம். மொழிப்போரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.

தாய்மொழி தமிழை அழித்து, வடமொழி இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். வட இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக லட்சக்கணக்கான பேர் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது என்று தான் மொழிப்போர் தியாகிகள் பாடுபட்டு தமிழ் மொழியை காத்துள்ளனர். வரக்கூடிய வாரங்களில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இந்தியா முழுவதும் சமநிலை இறக்க வேண்டும். இந்தி படித்தால் தான் நாட்டில் முன்னேற முடியும் என்ற சூழலை எதிர்க்கிறோம்”, என்றார்.
