இந்தி திரையுலகில் தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், அலியா பட், கரீனா கபூர் உள்பட பலர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் பல கதாநாயகிகளும், பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகளும் நடிகைகளாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகின்றனர். அந்த வகையில், பாலிவுட் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் அனன்யா பாண்டே. ஸ்டூண்ட் ஆப் தி இயர் பாகம் 2 படத்தின் மூலம் அவர் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இவரது தந்தை சன்க்கி பாண்டே தமிழில் கார்த்தி நடித்த சர்தார் படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
அவரது மகள் அனன்யா அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். காலி பீலி, கெஹ்ரையான், டிரீம் கேர்ள் பாகம் 2, ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. தற்போது கண்ட்ரோல் என்ற திரைப்படத்தில் அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
பொதுவாகவே மாறுபட்ட கதாபாத்திரத்திலும், சவாலான கதாபாத்திரத்திலும் நடிக்க ஆர்வம் காட்டும் அனன்யா பாண்டே, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, நட்சத்திர நடிகைகளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஆசை என்று கூறியிருக்கிறார். மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.