பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “28 கால்வாய்களில் முதல்வர் அறிவுறுத்தலில் பேரில் முழுமையாக தூர்வாரப்பட்டதால் தான் பெய்த மழைக்கு எங்கும் தண்ணீர் தேங்காத நிலை இருந்தது. சென்னை முழுவதும் கால்வாய்களை தூர்வார 2600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு 677 கிலோ மீட்டர் தூர் வார முடிவு செய்யப்பட்டு இதுவரை 350 கிலோமீட்டர் தூரத்திற்கு 331 கோடி செலவில் பணி நடைபெற்றுவருகிறது.
முதல்வர் சிங்கப்பூராக சென்னையை மாற்றிக்காட்டுவார். ஆனால் ஒரு வார்த்தை சொன்ன உடனே அது உடனே நிறைவேறி விடாது, ஜீபூம்பா என்று சொன்னால் வந்துவிடும் என்பதற்கு, மந்திரம் இல்லை. இரண்டு வருடம் என்பது போதிய காலகட்டம் அல்ல. சொன்னதை செய்கின்ற அரசு சொல்லாததையும் செய்கின்ற அரசு இது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிச்சயம் சென்னையை சிங்கப்பூராக ஆக்கி காட்டுவார்” என்றார்.
