ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், தேர்தல் பணிக்குழுவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன், “ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திக்கவுள்ளோம். இரட்டை இலை விவகாரத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம். இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும். எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. தேர்தல் களம் என்பதால் அமைச்சர்கள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. 1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அமையும். இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி என்பது எங்கள் லட்சியத்தின் இலக்கு. அதிமுக வேட்பாளரை எடப்பாடியார் அறிவித்த பிறகு
எங்களின் களம் இன்னும் வேகமாக இருக்கும்” எனக் கூறினார்.
பாஜக தனித்து போட்டியிடுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
