தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு’, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.


காமராஜரின் தியாகத்தைப் போற்றும் முயற்சி
பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கும் தியாகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசாணையின் முக்கிய விவரங்கள்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது.
“பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்.” என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இனி அரசு சான்றிதழ்கள், திட்டப் பலகைகள் மற்றும் பள்ளிப் பதிவேடுகள் அனைத்திலும் இப்புதிய பெயரே பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
