பெங்களூருவின் பிரபல உணவகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக சட்ட அமலாக்கத் துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தலைநகரான பெங்களூருவில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவகங்களில் ஒன்று ராமேஸ்வரம் காஃபே. அந்நகரத்தில் பல்வேறு பகுதிகளில் கிளை அமைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி
ப்ரூக்ஃப்லீடு பகுதியில் இருக்கும் ராமேஸ்வரம் காஃபே கிளையில் மதியம் 1 மணிக்கு எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக உணவகத்தில் இருந்த எல்.பி.ஜி சிலிண்டர் அல்லது பாய்லர் வெடித்து விபத்து நடந்ததாக சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் குண்டு வெடித்த உணவகத்தின் முன் பகுதியில் எந்தவித பொருளும் இல்லை. அதனால் சம்பவம் நடந்த நேரத்தை வைத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகள் ஆராயப்பட்டன.
அதன்படி ப்ரூக்ஃப்லீடு ராமேஸ்வரம் காஃபேயில் கடந்த 1ம் தேதி நன்பகல் ஒரு மணியளவில் 2 முறை குண்டு வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து இது குண்டுவெடிப்பு சம்பவம் என்று கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் நிலையில், இது தீவிரவாத செயலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ராமேஸ்வரம் காஃபே நிறுவனர்களில் ஒருவரான திவ்யா ராகவேந்திரா ராவ், ப்ரூக்ஃப்லீடு கிளை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ”எங்கள் ப்ரூக்ஃபீல்டு கிளையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனடை அடைகிறோம். சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்தை நாங்கள் அறிவோம். அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்கவும் உதவிகளையும் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட நபர்கள் விரைந்து குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என்று திவ்யா ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் காஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை டுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.