கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ‘GOAT India Tour 2025’ திட்டத்தின் கீழ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அதிகாலை (டிசம்பர் 13, 2025) கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் நிறுவப்பட்ட 70 அடி உயரமான மெஸ்ஸியின் சிலையை, அவர் காணொளி மூலம் திறந்து வைத்தார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
அவர் மைதானத்திற்குள் வந்தவுடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட சுமார் 70-80 பேர் கொண்ட குழு அவரை சூழ்ந்து கொண்டதால், கேலரியில் இருந்த ரசிகர்களுக்கு மெஸ்ஸியைப் பார்க்க முடியவில்லை.
இதன் காரணமாக கோபமடைந்த ரசிகர்கள் இருக்கைகளையும், மற்ற பொருட்களையும் சேதப்படுத்தியதுடன், தண்ணீர் பாட்டில்களையும் மைதானத்திற்குள் வீசினர். மெஸ்ஸியும் வெறும் 20 நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார்.
மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் கட்டணம்
மெஸ்ஸியின் இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸியுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 10 லட்சம் (ரூ. 9.95 லட்சம் + ஜிஎஸ்டி) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புக்காக 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


