கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு, கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
2017 பிப்ரவரி 17-ம் தேதி, எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், படப்பிடிப்பு முடிந்து கேரவனில் பயணித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை ஒரு கும்பல் வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. கேரவனை தடுத்து நிறுத்திய அவர்கள், அதில் அத்துமீறி நுழைந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள மாநில குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல்சர் சுனி எனப்படும் சுனில் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது பல்சர் சுனி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். நடிகையுடன் இருந்த முன்விரோதம் காரணமாக, திலீப் சதித் திட்டம் தீட்டி, கூலிப்படையை பயன்படுத்தி இந்த குற்றத்தை செய்ததாக போலீஸார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டனர். திலீப் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சுமார் 8 ஆண்டுகள் நீடித்த இந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான 28 சாட்சிகளில் பலர் பிறழ்சாட்சிகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தீர்ப்பை வழங்கினார். நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதேபோல், திலீப்பின் நண்பர் சரத் மற்றும் மேஸ்திரி சனிலும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பல்சர் சுனி, மார்ட்டின் ஆன்டனி, பி. மணிகண்டன், பிரதீப், விஜேஷ், வடிவால் சலீம் ஆகிய 6 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜரான 6 பேரும், வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகளை கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறி தங்களை மன்னிக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் அஜாக்குமார், இத்தகைய குற்றங்களுக்கு கருணை காட்டக் கூடாது என்றும், இந்த தண்டனை சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, “சதித் திட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும். இருப்பினும், நேரடியாக பாலியல் வன்கொடுமை செய்தவர் பல்சர் சுனி என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, பாலியல் கூட்டுவன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 6 குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்கழி: பூமியின் பிரம்ம முகூர்த்தமும், பக்தி இலக்கியங்களின் சங்கமமும்


