தமிழ் மக்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பொது மக்களுக்காக இலவச மருத்துவமனை கட்டப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் ரஜினி, சமீபத்தில் சென்னை திருப்பூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்ததாகவும் அங்கு புதிதாக அவர் வாங்கியுள்ள நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சென்னை ஓஎம்ஆர் சாலையிலிருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கரில் நிலம் வாங்கி அங்கு பிரம்மாண்டமான மருத்துவமனை கட்ட உள்ளாராம் ரஜினி. அந்த மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவமனை கட்டுமான பணிகளை நடிகர் ரஜினி விரைவில் தொடங்க இருக்கிறாராம். மேலும் இதனை கவனித்துக் கொள்ள தனது நண்பர் ஒருவரை ரஜினி நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி ராகவேந்திரா மண்டபம் போன்றவற்றை பொது மக்களுக்காக கட்டியுள்ள நிலையில் தற்போது, ரஜினி கட்டவுள்ள இந்த மருத்துவமனை ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.