ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்று கூட்டணி கட்சிகள் இடையை எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல் இரட்டை இலை யாருக்கு கிடைக்கிறதோ அவர்களை ஆதரிக்கும் நிலையிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் வேட்பாளர் நிறுத்துமா?, இல்லை எந்த அணிக்கு ஆதரவு என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக முழுவதும் பாஜக மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கருத்து கேட்கப்பட உள்ளது. அதே நேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உள்ளதால் இன்று பாஜக தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
