நாமக்கல்லில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் நாட்டுப்பண் பாடியபோது விழா பந்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நாமக்கல் அடுத்த பொம்மை குட்டை மேட்டில் நேற்று அரசு விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா நடைபெற்ற பந்தல் மற்றும் அதனை சுற்றி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவில் நாட்டுப் பண் பாடப்பட்டது. அப்போது பந்தலில் கடைசி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல் போன் பேசி கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தேசிய கீதம் பாடியபோது சேரில் அமர்ந்து செல்போன் பேசிய எஸ்ஐ சிவபிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
