- Advertisement -
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தி்ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிய உள்ளது. அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அண்மையில் பிரபல இந்தி பட தயாரிப்பாளரும், இயக்குநருமான சஜித் நாடியாட்வாலாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியானதைத் தொடர்ந்து, அவர் பாலிவுட்டில் நடிக்க உள்ளார் என்றும் அது ரஜினி நடிக்கும் 172-வது படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.




