சிதிலமடைந்து கிடக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று முதன்மைக்கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் விசாரணை நடத்தினார்.

இச்சம்பவத்துக்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, “சிதிலமடைந்து கிடக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். நேற்று ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இது போல அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.
தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திறனற்ற திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
