அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
1996-2001 வரையிலான காலகட்டத்தில் 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கு குவித்ததாக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி நாகரத்தினா தலைமையிலான அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் அபிஷேக் சிங்வி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் அமைச்சராக துறைமுருகனுக்கு பதவி காலம் முடிந்து சட்டசபை உறுப்பினராக இருந்தபோது அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரத்தில் சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சபாநாயகர் அனுமதியளிக்க முடியாது என்றும், இது போன்ற விவகாரங்களில் ஆளுநர் தரப்பு தான் முடிவெடுக்க வேண்டும் என வாதம் முன் வைத்தனர். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகனை கடந்த ஆண்டு விடுவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து மீண்டும் புதிதாக விசாரணை நடத்தி 6 மாத காலத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால் இது போன்ற வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் தான் உயர்நீதிமன்றம் செயல்பட முடியுமே தவிர மீண்டும் புதிதாக முதலில் இருந்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட முடியாது என்றும், ஏற்கனவே இது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.
எனவே சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி புதிதாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்ட ஆணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் ஏற்கனவே இதை சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டு நிலுவையிலுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐ.பெரியசாமி மனுவோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் துரைமுருகன் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள சொத்து குவிப்பு வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற தடை விதித்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
