தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘லோக்போல்’ (Lok Poll) அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின்படி இந்தத் தேர்தலில் திமுக மீண்டும் தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களின் மனநிலையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில், Lok Poll நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1.17 லட்சம் பேரிடம், தொகுதி ஒன்றுக்கு சராசரியாக 500 பேர் என்ற அளவில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 181 முதல் 189 இடங்கள் வரை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பதவி வகிக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது.
மறுபுறம், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை மீண்டும் பிடிக்க முயற்சி செய்து வரும் அதிமுகவுக்கு இது சவாலான நிலையை உருவாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், நடிகர் விஜய் தலைமையில் களமிறங்கியுள்ளது. ஆனால், இந்த கருத்துக்கணிப்பின் படி, தவெக 8 முதல் 10 இடங்கள் மட்டுமே வெல்லும் என கூறப்படுகிறது. அதேசமயம், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகித கணிப்புகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி, திமுக கூட்டணி சுமார் 40.10% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 29% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தவெகக்கு 23% மற்றும் நாதகக்கு 4.9% வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், “விடியல் பயணம்” போன்ற சமூக நலத்திட்டங்கள் திமுகவுக்கு சாதகமான மனநிலையை உருவாக்கியுள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
மொத்தத்தில், பல முனைகளில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், தொங்கு சட்டசபை உருவாகும் என்ற முன்கணிப்புகளை மீறி, திமுக கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தொடரும் என லோக்போல் கருத்துக்கணிப்பு கூறுவது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்
