ஈரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1.74 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றிரவு பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், குமரவேல் என்பவரின் காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 1.74 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து, இதுவரை வாகன தணிக்கையில் 9 நபர்களிடம், 12 லட்சத்து 5 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கேஎஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல் நாம் தமிழர், தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கி உள்ளனர்.
