
கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த அரசை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை கடந்த 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 01ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 04ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில், ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் சோதனையிட்ட பின் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.


