சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம் அருகே சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த தனியார் சட்டக் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டம், வெள்ளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் இந்தியன் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருடைய மகன் சஞ்சய் (18), சேலம் ஏற்காடு அடிவாரப்பகுதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டம் படிப்பு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை, சஞ்சய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவன் சஞ்சய் கன்னங்குறிச்சி அருகே சின்ன கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். அதேபோல மாணவியும், அவரது தாயாருடன் வீடு வாடகைக்கு எடுத்து அதே சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்ததால், இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் மாணவி தங்கி இருந்த வீட்டுக்கு மாணவன் சஞ்சய் சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனியாக பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென வீட்டில் குடியிருப்பவர் மாடிக்குச் சென்றபோது இருவரையும் பார்த்ததால், பயந்து போன மாணவன் சஞ்சய் மாடியில் இருந்து கீழே எட்டி குதித்துள்ளார். இதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றி கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
