ஈரோடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி படிவங்கள் அடங்கிய ஆவணத்தை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த பின் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய
தமிழ் மகன் உசேன் , “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சுற்றறிக்கையின் படி, “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றோம். ஆதரவு பெற்ற வேட்பாளரை தேர்வு செய்த பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கு சீட்டு படிவத்தின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பெறும்படி தேர்தல் ஆணையம் அவைத் தலைவர் என்கின்ற பொறுப்பை, உரிமையை எனக்குத் தந்து வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணியை வழங்கிய நிலையில் அந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்காக டெல்லி சென்று திரும்பி உள்ளோம். இது தேர்தலில் வெற்றி முகத்தின் முதல் படியாக கருதுகிறோம். நிச்சயமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி சுற்றறிக்கை மூலம் வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின்படி முறைப்படி நடத்தியுள்ளோம். மேலும் கழக இடைக்கால பொதுச் செயலாளர் ஆலோசனைப்படி அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் குற்றச்சாட்டான முறைப்படி கலந்தாலோசித்து வேட்பாளர் தேர்வு செய்யவில்லை என்பதை ஏற்க முடியாது, முறைப்படிதான் தேர்வு நடந்தது” என்றார்.
ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்
