சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 புதிய கூடுதல் நீதிபதிகளின் பதவியேற்பு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஐந்து வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட ஜான் சத்தியன் என்ற வழக்கறிஞரையும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் பரிந்துரை செய்தது.


இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஐந்துபேரும் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர், அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோர்ச்சா அமைப்பில் நிர்வாகியாக உள்ள விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்பதற்கு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
