கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள லோயர் பாரளை எஸ்டேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டு தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.


வால்பாறை அடுத்துள்ளது லோயர் பாரளை எஸ்டேட்டில் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வருபவர் மாரியப்பன்(43). கோவையில் மில்லர் இயந்திர ஓட்டுநராக பணியாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் காயமுற்ற நிலையில், பாரளை எஸ்டேட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
பிற்பகல் 1 மணி அளவில் அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்று உள்ளார். அவர் பாரளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக வந்த காட்டு தேனீக்கள் அவரை மூர்க்கத்தனமாக தாக்கி உள்ளது. முகம், தலை, கை, கால் என அவரை தாக்கியதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்த வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் போலீசார் வைத்து உள்ளனர்.
தேனீக்கள் வலம் வருவதை கண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் சுமார் 50 பேர் பீதியில் கூச்சலிட்டனர். உடனே ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறையில் வைத்து பூட்டி தேனீக்களிடம் இருந்து காப்பாற்றினர். பள்ளியை ஆய்வு செய்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேனீக்கள் கலைந்ததை உறுதி செய்த பின் பள்ளிக்கு பிற்பகல் 3 மணிக்கு மேல் விடுமுறை அளித்தார்.
