ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த புழல் சிறைவாசிகள் 20 பேருக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி சான்றிதழ் வழங்கினார்.

புழல் மத்திய சிறை-1ல் (தண்டனை) சிறையில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இச்சிறையில் உள்ள 20 சிறைவாசிகளுக்கு 03.08.2022 முதல் 30.11. 2022 வரை ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதற்கான நற்சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.அமரேஷ் பூஜாரி, மற்றும் திரு.V. வைகுந்த், இந்தியக் காவல் பணி , காவல்துறை தலைமை இயக்குநர் (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் பயிற்சி பெற்ற இல்லவாசிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கபட்டன. இந்நிகழ்ச்சியில் சிறைத்துறைத் துணைத் தலைவர், சென்னை நகரம் திரு.ஆ. முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார். புழல், மத்திய சிறை-1 (தண்டனை) கண்காணிப்பாளர் திருமதி.நிகிலா நாகேந்திரன் அவர்களும், மத்திய சிறை-2, புழல் கண்காணிப்பாளர் திரு.இரா. கிருஷ்ணராஜ் அவர்களும் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.


