தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சோரீஸ் புரம் பகுதியில் நேற்று பிற்பகல் முன் விரோதம் காரணமாக வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஓட ஓட விரட்டி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் முத்துக்குமாரின் உடல் பிரதேச பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகள் யாருக்கும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


