நான் முதல்வன் திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நான் முதல்வன் திட்டத்தின் பயன் என்பது ஓராண்டில், ஐந்தாண்டில் முடிவடைய கூடியதல்ல. தலைமுறை தலைமுறைக்கு நம் மாநிலத்திற்கும் நம் நாட்டிற்கும் பயன்பட கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சென்னை, தியாகராய நகர், திருமலை பிள்ளை சாலை, வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வித்யோதயா பள்ளி என்பது சென்னையில் மிக முக்கியமான பள்ளி மட்டுமல்ல, இது ஒரு பாரம்பரியமான பள்ளி என்றார்.

இந்தப் பள்ளி 1924-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டுக்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு. அது என்னவென்றால் அதுதான் கலைஞரின் பிறந்த ஆண்டு. கலைஞரை பொறுத்தவரைக்கும், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துவிட்டு. அவருக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அரசியல் ஈடுபாட்டின் காரணமாக உயர் கல்விக்கு அவர் செல்லவில்லை. கல்லூரியைக் காணாத கலைஞர் அவர்கள், எத்தனையோ கல்லூரிகளை, எத்தனையோ பல்கலைக்கழகங்களை இந்த தமிழகத்தில் அவர் உருவாக்கியிருக்கிறார். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு சிற்பியாக அவர் விளங்கியவர் என்றார்.
பெண் குழந்தைகள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்தி விடாமல் கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும். அதேபோல் கல்விக்கு தகுந்த வேலையில் அவர்கள் சேர வேண்டும். திருமணத்திற்கு பிறகு பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளுக்கு ஏற்ற பணிகளில் அவர்கள் இயங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை செய்து கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அனைவருக்கும் கல்வி வேண்டும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும் , அது மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அமைய வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார். பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி, போராடி பெற்ற உரிமைகளை திரும்ப பறிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த பிழைப்புவாத கருத்துக்களை தூக்கி குப்பை தொட்டில் போட்டுவிட்டு மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்றார்.
