உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 24-ம் தேதி) ஒரே நாளில், திரையரங்குகளில் 4 தமிழ் படங்கள் வெளியாகிறது!
வித்தியாசமான கதைக்களத்தில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஹே சினாமிகா‘ என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருந்தா மாஸ்டர். இவர், இயக்குநராக உருவெடுத்து வெளிவந்த முதல் படமான ஹே சினாமிகா இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், 2-வது படமான இதில் குமரி மாவட்டத்தை களப்பின்னணியாக கொண்ட ஒரு ஆக்சன் கதையாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.


இந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் பாபி சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவான இந்த படம் தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நாளை வெளியாகிறது.
மிர்ச்சி சிவா நடிப்பில் ’சிங்கிள் சங்கரும் செல்போன் சிம்ரனும்’ என்ற திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். விக்னேஷ் ஷா என்பவர் இப்படத்தை இயக்கிய இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார்.

முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ரஜினி முருகன், ஜெய் பீம் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர் ‘சூப்பர் குட்’ சுப்ரமணியன் நடிப்பில் உருவான ‘ஓம் வெள்ளிமலை’ படமும் நாளை களம் காண்கிறது. ஓம் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது தவிர தமிழில் குற்றம் புரிந்தால் என்ற திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது.
அருண் விஜய்யின் ’பார்டர்’ திரைப்படம் நாளை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போகி உள்ளது.

மேலும் சந்தீப் கிஷான் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான மைக்கேல் திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில்(Aahaa) ரிலீசாக உள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நந்தா நடிப்பில் உருவான ‘இரு துருவம்’ என்ற இணைய தொடரின் 2-ம் பாகமும் நாளை ஓ.டி.டி. (Sony LIV) தளத்தில் வெளியாக இருக்கிறது.

அருண் பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் பிரசன்னா, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 2-ம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.


