தங்கலான் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விக்ரம். குறிப்பாக இவர் நடித்திருந்த சேது, காசி, பிதாமகன் போன்ற திரைப்படங்களில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்தார். அதேபோல் தற்போது தங்கலான் திரைப்படத்திலும் புதிய பரிமாணத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்த தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் விக்ரம் தவிர மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் எத்தகைய கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதன் பின்னணியில் இந்த தங்கலான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி நாளை ஜூலை 10 அன்று இதன் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ட்ரெய்லரிலேயே படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையிடப்படும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.