நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனவே அதன் அடையாளமாகவே அன்று முதல் ஜெயம் ரவி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து எம். குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார் ஜெயம் ரவி. ஆனால் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் இவர், சுதா கொங்கரா, கணேஷ் கே பாபு என தொடர்ந்து பல வெற்றி பட இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார். மேலும் (ஜனவரி 14) நாளை இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றி இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இனி நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் திரைத்துறை மீது தான் கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.