ஹனு ராகவப்புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் கடைசியாக ‘கல்கி 2898AD’ திரைப்படம் வெளியாகி ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அடுத்தது 2026 ஜனவரி 9ஆம் தேதி இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தி ராஜாசாப்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்க சுதீப் சாட்டர்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் இணைந்து இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயபிரதா, அனுபம் கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு இன்று (அக்டோபர் 23) பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு Fauzi என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான போஸ்டர்களை பார்க்கும்போது இந்த படமானது ஒரு படைவீரரின் கதையை மையமாக வைத்து போர் சம்பந்தமான படமாக உருவாகி வருவது போல் தெரிகிறது. மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்திலும் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.


