கனடாவில் எம்பிஏ (MBA) கல்வி பயின்று வந்த உதகையைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன் (29) மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்தியா திரும்புவதற்கு முந்தைய நாள் அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முள்ளிக்கொரையைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் ராஜப்பா என்பவரது இளைய மகன் அரவிந்தன் (29). இவர் கனடா நாட்டில் இரண்டு ஆண்டு எம்பிஏ உயர் கல்வி பயின்று வந்தார். கடந்த வாரம் இவரது படிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், நேற்று மாலை அவர் கனடாவிலிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் 18-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கனடா நாட்டுப் போலீசார் அவரது பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியா திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நேரத்தில் இத்தகைய துயரச் செய்தி வந்ததால் பெற்றோர் உறைந்துபோயினர்.
அரவிந்தனின் மரணம் குறித்து முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள அவரது பெற்றோரும் உறவினர்களும் கனடா நாட்டுப் போலீசாரையும், அவர் கல்வி பயின்ற கல்லூரியையும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், எந்தவிதத் தகவலும் கிடைக்காததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அரவிந்தனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர். அரவிந்தனின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை உடனடியாகத் தமிழகத்திற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
கனடாவில் உயிரிழந்த அரவிந்தனுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
